முழு ஊரடங்கு - கோவையில் முக்கிய சாலைகள் வெறிச்சோடின!

 
cbe lockdown

கோவையில் ஞாயிறு முழு ஊரடங்கையொட்டி, நகரின் முக்கிய சாலைகள் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், நோய் தடுப்பு நடவடிக்கையாக ஞாயிற்றுக் கிழமைகளில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கினை தமிழக அரசு அறிவித்து இருந்தது. இதனையொட்டி, கோவை மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் அனைத்து வர்த்தக நிறுவனங்கள், கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. பேருந்துகள், ஆட்டோ, கார் முதலான வாகனங்கள் ஒடவில்லை.

cbe lockdown

மார்க்கெட்டுகள் செயல்படாத நிலையில், திரையரங்குகளும் மூடப்பட்டு இருந்தன. உணவகங்களில் பார்சல் உணவு மட்டும் வழங்கப்பட்டு வந்தது. எனினும் அம்மா உணவகங்கள் வழக்கம் போல் செயல்பட்டன. மேலும், பால், பத்திரிகை, மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகள் வழக்கம் போல செயல்பட்டன. தளர்வுகளற்ற ஊரடங்கு காரணமாக எப்போதும் பரபரப்பாக காணப்படும் கோவை ஒப்பணக்கார வீதி, பெரியக்கடை வீதி, ராஜ வீதி, கிராஸ்கட் ரோடு உள்ளிட்ட பகுதிகள் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

cbe lockdown

 ஊரடங்கை மீறி பொதுமக்கள் சாலைகளில் சுற்றுவதை தடுக்கும் விதமாக 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும், அவசியமின்றி வெளியே சுற்றியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும், முழு ஊரடங்கை ஒட்டி கோவையில் உள்ள 11 சோதனைச்சாவடிகளிலும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில், வாகனங்கள் மூலம் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.