பஞ்சப்பள்ளி கூட்டுக்குடிநீர் திட்டத்திலிருந்து தருமபுரி நகருக்கு மீண்டும் குடிநீர் வழங்கும் பணி துவக்கம்!

 
panchapalli

பஞ்சப்பள்ளி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் இருந்து தருமபுரி நகர மக்களுக்கு மீண்டும் குடிநீர் வழங்கும் பணியை, வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நேற்று தொடங்கி வைத்தார்.

தருமபுரி சந்தைப்பேட்டை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வளாகத்தில், பஞ்சப்பள்ளி குடிநீர் திட்டத்தில் இருந்து தருமபுரி நகர பொதுமக்களுக்கு மீண்டும் குடிநீர் வழங்கும் பணி தொடக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்துகொண்டு, திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், முதலமைச்சர் ஆணையின்படி தருமபுரி நகரப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை இன்றைய தினம் நிறைவேற்றப்பட்டு, பஞ்சப்பள்ளி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் இருந்து தருமபுரி நகர மக்களுக்கு மீண்டும் குடிநீர் வழங்கும் பணி இன்று தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இக்குடிநீர் வழங்கும் திட்டத்தில் இருந்து மீண்டும் தருமபுரி நகர மக்களுக்கு குடிநீர் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. 

panchapalli

இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தருமபுரி நகரின் மேற்கே 55 கி.மீ தொலைவில் சின்னாறு அணையில் பஞ்சப்பள்ளி என்கிற இடத்தில் தருமபுரி கூட்டுக்குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் தருமபுரி நகரில் உள்ள 1 முதல் 33 வார்டு பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. மேலும், பஞ்சப்பள்ளி,  மாரண்டஅள்ளி மற்றும் பாலக்கோடு பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த 4 ஆண்டுகளாக இத்திட்டத்தில் இருந்து தருமபுரி நகர மக்களுக்கு குடிநீர் வழங்கும் பணி பல்வேறு காரணங்களால்  நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பொதுமக்கள் விடுத்த கோரிக்கை அடிப்படையில் ரூ.90 லட்சம் லட்சம் மதிப்பீட்டில் பிரதான குடிநீர் குழாய் மற்றும் நீர்மூழ்கி மின்மோட்டார்கள் சரிசெய்யப்பட்டு, இன்றைய தினம் தருமபுரி நகர மக்களுக்கு மீண்டும் பஞ்சப்பள்ளி குடிநீர் வழங்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால் தருமபுரி நகராட்சியில்  உள்ள 18 வார்டு பகுதிகளுக்கு இக்குடிநீர் வழங்கப்படுவதால் இதன் மூலம் சுமார் 37,800-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைவார்கள் என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி, எம்எல்ஏ வெங்கடேஷ்வரன், முன்னாள் எம்எல்ஏ-க்கள் தடங்கம் சுப்பிரமணி, நகராட்சி ஆணையர் சித்ரா சுகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.