அரூரில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை துவங்கி வைத்த ஆட்சியர் திவ்யதர்ஷினி!

 
dharmapuri

தருமபுரி மாவட்டம் அரூரில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி நேற்று தொடங்கி வைத்தார்.

தருமபுரி மாவட்டம் அரூரில் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க வளாகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி ஆட்சியர் திவ்யதர்ஷினி தலைமையில் நடைபெற்றது. இதில், தருமபுரி தொகுதி திமுக எம்.பி., செந்தில்குமார் முன்னிலை வகித்தார். இதில், குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பை ஆட்சியர் திவ்யதர்ஷினி வழங்கினார். பின்னர் பேசிய அவர், தருமபுரி மாவட்டத்தில் 4,60,825 குடும்ப அட்டைதார்கள் மற்றும் இலங்கை தமிழர்கள் 718 குடும்பத்தினருக்கு சுமார் ஆயிரத்து 71 நியாய விலைக்கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என  தெரிவித்தார்.

dharmapuri

நாள் ஒன்றுக்கு 150 முதல் 200 குடும்ப அட்டைதார்களுக்கு பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்றும், இதில் பச்சரிசி, வெல்லம், பாசிப்பருப்பு, கோதுமை, உப்பு, செங்கரும்பு உள்ளிட்ட 21 பொருட்கள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து, முகக் கவசம் அணிந்து வந்து நியாய விலைக்கடைகளில் பொருட்களை வாங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். தருமபுரி மாவட்டத்தில் 15 - 18 வயது வரையிலான சிறார்களுக்கு, அவர்கள் பயிலும் பள்ளிகளிலேயே கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதாக தெரிவித்த ஆட்சியர் திவ்யதர்ஷினி, பெற்றோர் எவ்வித தயக்கமும் இன்றி சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும் என தெரிவித்தார். 

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ தடங்கம் சுப்பிரமணி, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ராமதாஸ், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஜெயக்குமார், கோட்டாட்சியர் முத்தையா, வட்டாட்சியர் கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.