கோவை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்... நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு விருப்ப மனு தாக்கல் துவக்கம்!

 
dmk

கோவையில் நடைபெறும் திமுக மாவட்ட செயற்குழு கூட்டத்தில், திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் கலந்துகொண்டு, கட்சியினரிடம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனுக்களை பெற்று வருகின்றனர். 

கோவை காளப்பட்டி சுகுணா ஆடிடோரியத்தில் கோவை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, திமுக துணை பொதுச்செயலாளரும், நீலகிரி தொகுதி எம்.பியுமான ஆ.ராஜா ஆகியோர் தலைமையில் இன்று நடைபெற்று வருகிறது. இதில், கோவை  மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளில் போட்டியிட விரும்பும் திமுகவினர் விருப்ப மனுக்களை  தாக்கல் செய்து வருகின்றனர். இன்று துவங்கிய வேட்புமனுத்தாக்கல் வரும்19ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

cbe

செயற்குழு கூட்டத்தில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது,  இன்று உள்ளாட்சி தேர்தலுக்காக துவங்கும் விருப்பமனு தாக்கல்  வரும் 19ஆம் தேதி வரை நடைபெறும். இந்த விருப்ப மனுக்களை பரிசீலித்த பின்னர் தலைமை அறிவிக்கும் நபர்களை தவிர மற்றவர்கள் அனைவரும் தேர்தல் பணியாற்றிட வேண்டும். அறிவிக்கும் வேட்பாளர்களுக்கு எதிர்வரிசையில் நின்று பிரச்சினை ஏற்படுத்தினால் முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். எதிரிகள் என்ன செய்கின்றனர் என்பதை பார்த்து முணுமுணுப்பது சரியாக இருக்காது. கோவை மாவட்டத்தில் ஏன் தோற்றோம் என்பதை சிந்திக்க வேண்டும். கோவை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் 275 வார்டுகளிலும் வெற்றி பெற வேண்டும். முதல்வர் யாரை வேட்பாளராக அறிவிக்கிறாரோ, அவரை ஏற்றுக்கொள்ள வேண்டும். அனைவரும் களத்தில் பணியாற்ற வேண்டும். 

கோவையில் 2,298 வாக்குச்சாவடிகள் இருக்கிறது. ஒரு வாக்குச்சாவடிக்கு 12 பேர் கொண்ட குழு காட்டயம் பணியாற்ற வேண்டும். அனைவரும் மக்களை சந்தித்து, நேரில் சென்று சேகரிக்க வேண்டும். வரும் 22ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் கோவை வருகிறார்.  அப்போது, 1 லட்சம் பேர் திரண்டு முதல்வரை வரவேற்க வேண்டும். விமான நிலையத்தில் இருந்து வ.உ.சி மைதானம் வரை ஒதுக்கப்படும் இடங்களில் பொறுப்பாளர்கள் பணியாற்றிட வேண்டும். கோவைக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் அறிவிக்க இருக்கின்றார்.

cbe

102 இடங்களில் மக்கள் சபை நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில், 80 ஆயிரம் வரைமனுக்கள் பெறப்பட்டு உள்ளது. 1 லட்சம் மனுக்கள் வரை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெறப்பட்ட மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டதா? என்பதை  பூத் கமிட்டியில் இருப்பவர்கள் உறுதி செய்ய வேண்டும். கோவை மாவட்டத்தில் இன்னும் சில அரசு அதிகாரிகள், அதிமுக சொல்வதை கேட்பதாக மக்கள் சொல்கின்றனர். நான் அப்படி பார்க்கவில்லை. நம்முடைய செயல்பாட்டில் தான் எல்லாம் இருக்கிறது. அரசு விழாக்களில் கட்சியினர் பொறுப்பை உணர்ந்து கலந்து கொள்ள வேண்டும். சால்வை, பூங்கொத்து போன்றவற்றை  கோவை மாவட்டத்தில் கட்சியினர் இனி கொடுக்க வேண்டாம் இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில பேசிய திமுக எம்பி ஆ.ராசா, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் உளவியல் ரீதியாக  அதிமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்த வேண்டும் என்றும், இந்த உள்ளாட்சி தேர்தலில் ஜெயிக்க முடியாது என அதிமுக உணரும் வகையில் கட்சியினர் செயல்படவேண்டும் எனவும் கூறினார்.