கோவை அருகே அரசுப்பள்ளி மாணவர்களிடையே மோதல்; படுகாயமடைந்த மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

 
student dead

கோவை மாவட்டம் ஆலந்துறையில்  அரசுப்பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்த மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

கோவை மாவட்டம் பேரூர் அருகே உள்ள ஆலந்துறை பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வரும் மாணவர்களுக்கு இடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென மோதல் ஏற்பட்டது. இதில், ஒரு மாணவரை 10-க்கும் மேற்பட்டோர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் தாக்குதலுக்கு உள்ளான மாணவரின் நண்பர்கள், எதிர் தரப்பினருடன் கைகலப்பில் ஈடுபட்டனர்.

coimbatore gh

அப்போது, முன்னாள் மாணவர் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக குத்தியதில் 3 மாணவர்களுக்கு படுகாயம் ஏற்பட்டது. இதில் ஒரு மாணவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து, அவர் கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இந்த சம்பவம் குறித்து ஆலந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து கத்திக்குத்தில் ஈடுபட்ட முன்னாள் மாணவர் மற்றும் அதே பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவர் என 2 பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

இந்த நிலையில், கத்திக்குத்து காயங்களுடக் சிகிச்சை பெற்று வந்த மாணவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற 2 மாணவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை அடுத்து, ஆலந்துறை போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி  விசாரித்து வருகின்றனர்.