பெரம்பலூர் அருகே டேங்கர் லாரி மீது கார் மோதி விபத்து - அண்ணன், தம்பி பலி!

 
perambalur

பெரம்பலூர் மாவட்டம் பாடாலூரில் முன்னால் சென்ற டேங்கர் லாரியின் மீது கார் மோதி தீப்பற்றியதில், அண்ணன், தம்பி பரிதாபமாக உயிரிழந்தனர். 

சென்னை குரோம்பேட்டை அஸ்தினாபுரம் மாருதி நகரை சேர்ந்தவர் குமார்(48). தனியார் நிறுவன ஊழியர். இவர் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக சொந்த ஊரான திருச்சி மாவட்டம் குளத்தூருக்கு நேற்றிரவு காரில் புறப்பட்டு சென்றார். அவருடன் அவரது தம்பி வெங்கட வரதன்(45) மற்றும் மகள் தன்யாஸ்ரீ ஆகியோரும் சென்று கொண்டிருந்தனர். காரை கள்ளக்குறிச்சியை சேர்ந்த விசுவநாதன் என்பவர் ஓட்டிச்சென்றார்.

accident

இன்று அதிகாலை 4 மணி அளவில் பெரம்பலூர்மாவட்டம் பாடாலூர் ஆஞ்சநேயர் கோவில் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது எதிர்பாராத விதமாக கார் முன்னால் சென்ற டேங்கர் லாரியின் மீது அதிவேகமாக மோதி விபத்திற்குள்ளானது. இதில், லாரியின் அடியில் கார் சிக்கி கொண்டதில் லாரியும், காரும் தீப்பற்றி எரிந்தது. இதில், படுகாயமடைந்த குமார், அவரது தம்பி வெங்கட வரதன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், குமாரின் மகள் தன்யா ஸ்ரீ மற்றும் ஓட்டுநர் காயமடைந்தனர். அவர்களை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து, உயிரிழந்த இருவரது உடல்களையும் மீட்டு பாடாலூர் போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் கார் முற்றிலும் எரிந்தும், டேங்கர் லாரியின் பின்பகுதியும் எரிந்து சேதமடைந்தன. விபத்து குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.