பல்லடத்தில் பிரதமரை விமர்சித்ததாக கூறி தள்ளுவண்டி கடைகாரர் மீது கொடூர தாக்குதல்; பாஜக நிர்வாகி உள்பட இருவர் கைது!

 
palladam

பல்லடத்தில் பிரதமர் மோடியை விமர்சித்ததாக கூறி தள்ளுவண்டி கடைகாரர் மீது கொடூர தாக்குதல் நடத்திய பாஜக இளைஞரணி நிர்வாகி உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பஞ்சாப் சென்ற பிரதமர் மோடியின் பாதுகாப்பில் குறைபாடு ஏற்பட்டதை கண்டித்து, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நேற்று பாஜக சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின்போது, தள்ளுவண்டி வியாபாரி ஒருவர், பிதமர் மோடியை விமர்சித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர் தள்ளுவண்டி வியாபாரியை தாக்கினர். இதனால் அவர் உயிருக்கு அஞ்சி அருகில் உள்ள கடைக்குள் சென்று பதுங்கினார். எனினும் அவரை விடாமல் துரத்திய பாஜகவினர் அவரை தாக்க முயன்றனர்.  

palladam

இதனை அடுத்து, போலீசார் பாஜகவினரை தடுத்து நிறுத்தி தள்ளுவண்டி கடைகாரருக்கு பாதுகாப்பு வழங்கியது, அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். எனினும், பாஜவினர் போலீசாரையும் மீறி கடைக்குள் புகுந்து தள்ளுவண்டி வியாபாரியை தாக்கினர். இதில் நிலைகுலைந்து அவர் கீழே விழுந்தார். பொதுமக்கள் மற்றும் போலீசார் முன்னிலையில் பாஜகவினர் கொடுரமாக தாக்கியதை கண்டு அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர்.

போலீசார் உடனடியாக பாஜகவினரை அங்கிருந்து வெளியேற்றி, தாக்கப்பட்ட தள்ளுவண்டி வியாபாரியை மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் பல்லடம் அருகே உள்ள  அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி என்பதும், அதே பகுதியில் தள்ளுவண்டியில் வாழைப்பழ வியாபாரம் செய்து வருவதும் தெரியவந்தது. மேலும், தான் மோடியை விமர்சிக்கவில்லை என்றும், பாஜகவினர் போராட்டம் முடிந்துவிட்டதால் நகருங்கள் என கூறியதால் ஆத்திரத்தில் தன்னை பாஜகவினர் தாக்கியதாக தெரிவித்தார்.


இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட பல்லடம் போலீசார், பாஜகவை சேர்ந்த 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும், கட்சியின் இளைஞரணி செயலாளர் ரமேஷ், ராஜ்குமார் ஆகிய 2 பேரை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பாஜகவினர் அளித்த புகாரின் பேரில் தள்ளுவண்டி கடைகாரர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.