குப்பைக்கு தீவைத்தபோது தீப்பற்றியதில் ஆண் குழந்தை பலி!

 
infant

கோவை தொண்டாமுத்தூரில் குப்பைக்கு தீவைத்தபோது ஆடையில் தீப்பற்றியதில் 2 மாத கைக்குழந்தை பரிதாபமாக உயிரிழந்தார். 

கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள அம்மன் நகரை சேர்ந்தவர் ஐ.டி. ஊழியர் தியாகராஜன். இவரது மனைவி சுவாதி(26). இவர்களது 2 மாத ஆண் குழந்தை ஆதிரன். சம்பவத்தன்று வீட்டின் அருகில் குவித்து வைக்கப்பட்டிருந்த குப்பைகளை, சுவாதி குழந்தையை கையில் வைத்துக்கொண்டு மண்ணெண்ணை ஊற்றி எரிக்க முயன்றார். அப்போது, எதிர்பாராத விதமாக அவரது உடையில் தீப்பற்றியது. இதில் உடல் முழுவதும் தீ பரவியதில், கையில் வைத்திருந்த குழந்தை ஆதிரனுக்கும் தீக்காயம் ஏற்பட்டது. 

fire

சுவாதியின் அலறல் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று இருவரையும் மீட்டு, சாய்பாபா காலனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சுவாதி மற்றும் குழந்தைக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். சுவாதிக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தொண்டாமுத்தூர் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.