காஞ்சிபுரம் அருகே பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி கொள்ளை முயற்சி... 6 பேரை கைதுசெய்த போலீசார்!

 
kanchi attack

காஞ்சிபுரம் அருகே தனியார் பெட்ரோல் ஊழியரை தாக்கிவிட்டு தப்பியோடிய 6 இளைஞர்களை, சம்பவம் நடந்த 24 மணிநேரத்தில் பாலுசெட்டிசத்திரம் போலீசார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம் அருகே கீழ்க்கதிர்ப்பூர் பகுதியில் நாயரா பெட்ரோல் விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று முன்தினம் இரவு சோமந்தாங்கலை சேர்ந்த மணிகண்டன் என்ற ஊழியர் பெட்ரோல் போடும் பணியில் ஈடுபட்டிருந்தார். நள்ளிரவில் 3 இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கும்பல், மணிகண்டனிடம் கத்தியை காட்டி மிரட்டி பெட்ரோல் நிரப்பும்படி மிரட்டி உள்ளனர். அதற்கு மறுப்பு தெரிவித்ததால் அந்த கும்பல் மணிகண்டனை சரமாரியாக தாக்கிவிட்டு கத்தியை காட்டி பணத்தை பறிக்க முயன்றனர்.

இதனை கண்ட சக ஊழியர்கள் அங்கு சென்றபோது 6 பேரும் அங்கிருந்து தப்பியோடினர்.இந்த தாக்குதல் சம்பவம் குறித்து பெட்ரோல் பங்க் நிர்வாகம் சார்பில் பாலுச்செட்டி சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து, அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

kanchi

அப்போது, தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் செங்குன்றம் எடப்பாளையத்தை சேர்ந்த சதிஷ்(23), பூந்தமல்லி கரையாஞ்சாவடியை சேர்ந்த இமானுவேல்(18), பாலாஜிராஜா(19), பிரவீன்(18), சென்னை  விருகம்பாக்கம் ஜெகன்கராஜ்(20) மற்றும் குமணன்சாவடியை சேர்ந்த மதியழகன்(20) என்பது தெரியவந்தது. இதனை அடுத்து, பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய 6 பேரையும் பாலுசெட்டி சத்திரம் போலீசார் கைது செய்தனர்.

மேலும், அவர்களிடம் இருந்து 3 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். சமபவம் நடந்த 24 மணிநேரத்தில் தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடித்த பாலுசெட்டி சத்திரம் போலீசாருக்கு, காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. எம்.சுதாகர் பாராட்டு தெரிவித்தார்.