கிருஷ்ணகிரி அருகே தொழிலாளியை கட்டிப்போட்டு தாக்குதல்... வடமாநில தொழிலாளர்கள் உள்பட 7 பேர் கைது!
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே திருடன் என நினைத்து தொழிலாளியை கட்டிப்போட்டு தாக்கிய வடமாநில தொழிலாளர்கள் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த சின்னாறு பகுதியில் காய்கறி மற்றும் பழங்கள் பதப்படுத்தும் கட்டிடம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. ஓசூரை சேர்ந்த ஒப்பந்ததார் மணி, கட்டிவரும் இந்த கட்டிடத்தில் ஊத்தங்கரையை சேர்ந்த நாராயணன் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து, அவரது உறவினர் சேலம் மாவட்டம் கந்தனூரை சேர்ந்த பிரபாகரன் (33) என்பவர் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 28-ஆம் தேதி இரவு அந்த பகுதியில் உள்ள கம்பி வேலி அருகில் பிரபாகரன் அமர்ந்துள்ளார். அப்போது, அங்கு வந்த பொறியாளர் தங்கராஜ் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் 5 பேர் பிரபாகரன் இரும்பு திருட வந்ததாக நினைத்து, அவரை கட்டிப்போட்டு சரமாரியாக தாக்கி உள்ளனர்.

மேலும் பிரபாகரனை அந்த பகுதியில் உள்ள அறையில் கட்டி போட்டு இரும்பு கம்பியால் அவர்கள் சரமாரியாக தாக்கினர். மேலும், இதனை வீடியோ எடுத்து, பிரபாகரனின் உறவினர் நாராயணனுக்கு அனுப்பி, திருடிய இரும்பு பொருட்களை திருப்பி தரக்கோரி மிரட்டி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த நாராயணன், இது குறித்து சூளகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்டெய்னர் அறையில் அடைக்கப்பட்டிருந்த பிரபாகரனை மீட்டு, சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து பிரபாகரன் அளித்த புகாரின் பேரில் சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்த, கட்டிட ஒப்பந்ததாரர் மணி (47), பொறியாளர் தர்மபுரி மாவட்டம் திம்மராயன் கொட்டாயை சேர்ந்த தங்கராஜ் (33), வடமாநிலத்தை சேர்ந்த ஷியாம்சுந்தர் (46), பாலேந்தர் (28), சுஷில்குமார் (24), அர்ஜூன் (24), அசாமை சேர்ந்த திப்பந்தர் சோக்கியா (22), ஆகிய 7 பேரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

