பணம் திருடியதால் ஆத்திரம்... தாய் சூடுவைத்ததில் 10 வயது சிறுமி பலி!

 
dead body

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உறவினர் வீட்டில் பணம் திருடிய ரூ.10 வயது சிறுமிக்கு தாய் சூடுவைத்ததால், அவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி மணிமேகலை. இவர்களது 10 வயது மகாலட்சுமி. சிறுமி சரியாக பள்ளிக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவரது தாய் சூடுவைத்து தண்டனை அளித்து வந்துள்ளார். இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு சிறுமி மகாலட்சுமி, தனது உறவினரான  மல்லிகா என்பவரது வீட்டில் இருந்து ரூ.70-ஐ திருடி திண்டபம் வாங்கி தின்றுள்ளார். இதனை அறிந்த, மல்லிகா சிறுமியை கண்டித்துள்ளார். மேலும், இதுகுறித்து அவரது தாய் மணிமேகலையிடம் தெரிவித்துள்ளார்.

trichy gh

ஆத்திரமடைந்த மணிமேகலை, சிறுமிக்கு சூடு வைத்துள்ளார். மேலும், காய்ந்த மிளகாயை நெருப்பில் போட்டு அந்த நொடியை மூக்கில் இழுக்க செய்துள்ளனர். இதில் மகாலட்சுமிக்கு உடல்நல குறைவு ஏற்பபட்டுள்ளது. இதனை அடுத்து, அவர் கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மகாலட்சுமி உயிரிழந்தார்.

தகவல் அறிந்த அரும்பாவூர் போலீசார், இதுகுறித்து சிறுமியின் தாய் மற்றும் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சூடு வைப்பதற்கு முன்பாகவே குழந்தைக்கு உடல்நல குறைவு இருந்ததாக பெற்றோர் தெரிவித்துள்ளதால் போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். எனவே, தனி மருத்துவர் குழுவை அமைத்து சிறுமிக்கு உடற்கூறு ஆய்வு செய்ய திட்டமிட்டு உள்ளனர். தற்போது, சிறுமியின் உடல் திருச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது.