கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழப்பு... தனியார் மருத்துவமனை மீது உறவினர்கள் புகார்!

 
dead body

தேனியில் தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்துகொண்ட பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேனி அடுத்துள்ள உப்புகோட்டை பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் பாபு. கூலி தொழிலாளி. இவரது மனைவி இந்திராணி(22). இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில், மீண்டும் கர்ப்பமடைந்த இந்திராணிக்கு, கடந்த டிசம்பர் 31ஆம் தேதி திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து, அவரை அரண்மனைப்புதூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு இந்திராணியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கரு வளர்ச்சியடையாமல் உள்ளதாகவும், எனவே அதனை கலைத்து விடும்படியும் அறிவுறுத்தி உள்ளார். இதனை அடுத்து, இந்திராணிக்கு மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்யப்பட்டு உள்ளது. 

theni

இதில் அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால் கடந்த 2ஆம் தேதி, ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு இந்திராணியை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த இந்திராணியின் கணவர் பாண்டியபாபு, தனியார் மருத்துவமனை மீது பழனிசெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் உடலை மீட்டுபிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே, இந்திராணியின் இறப்புக்கு காரணமான தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அவரது உறவினர்கள் உடலை பெற மறுத்து மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து, போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.