பர்கூரில் கழிவுநீர் கால்வாயில் சடலமாக கிடந்த தொழிலாளி... கொலையா? என போலீசார் விசாரணை!

 
bargur

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் கழிவுநீர் கால்வாயில் சடலமாக கிடந்த கூலி தொழிலாளியின் உடலை மீட்டு, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிருஷ்ணகிரி  மாவட்டம் பர்கூர் ஜவுளி மார்க்கெட் பின்புறம் உள்ள கழிவுநீர் கால்வாயில் நேற்று ஆண் சடலம் ஒன்று கிடந்தது. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் பர்கூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அப்போது, உயிரிழந்த நபரின் சட்டையில் இருந்த ஆதார் அட்டை கைப்பற்றி விசாரித்தபோது அவர் தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டையை சேர்ந்த கந்தசாமி மகன் மனோகர்(41) என்பது தெரியவந்தது. மேலும், இவர் பர்கூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி கூலி வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. 

krishnagiri

இதனை அடுத்து, போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும், இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மனோகர் மதுபோதையில் கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்தாரா? அல்லது யாரேனும் கொலை செய்து கால்வாயில் உடலை வீசி சென்றனரா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். எப்போதும் மக்கள் நடமாட்டம் மிகுந்த பர்கூர் ஜவுளிமார்க்கெட் பகுதியில் தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.