கிணற்றில் நீச்சல் பழகிய பிளஸ் 2 மாணவி நீரில் மூழ்கி பலி!

 
drowned

திருப்பத்தூர் அருகே கிணற்றில் நீச்சல் பழகிய பிளஸ் 2 மாணவி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் கும்மிடிக்காம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட அனிகானூரை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் திருப்பதி. இவரது மகள் கலையரசி (18). இவர் அதே பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று தனது தம்பி செல்வம் (12) மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து அதே பகுதியில் உள்ள கிணற்றுக்கு குளிக்க சென்றுள்ளார். மற்றவர்கள் கிணற்றில் குதித்து விளையாடுவதை பார்த்த கலையரசி, தானும் கிணற்றில் நீச்சலடிக்க விரும்பினார். இதனால், எண்ணெய் கேனை இடுப்பில் கட்டிக்கொண்டு கிணற்றில் நீச்சல் பழகிய நிலையில், இடையூறாக இருப்பதாக கருதி கேனை கழற்றி உள்ளார்.

drowning

அப்போது, எதிர்பாராத விதமாக கலையரசி தண்ணீரில் மூழ்கினார்.  இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது தம்பி செல்வம் உள்ளிட்டோர் அருகில் உள்ளவர்களிடம் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், கிராமத்தினர் திருப்பத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேர தேடுதலுக்கு பின்னர் கிணற்றில் இருந்து கலையரசியை சடலமாக மீட்டனர். 

தொடர்ந்து, கந்திலி போலீசார் கலையரசியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக  திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து கலையரசியின் தந்தை திருப்பதி அளித்த புகாரின் பேரில், கந்திலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நீச்சல் பழகியபோது கிணற்றில் மூழ்கி பிளஸ் 2 மாணவி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.