பேருந்து நிலையத்தில் தவித்த 3 வயது சிறுவன்... பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார்!

 
harur

தருமபுரி மாவட்டம் அரூர் பேருந்து நிலையத்தில் தவறவிடப்பட்ட 3 வயது  ஆண் குழந்தையை மீட்ட போலீசார், குழந்தையை 2 மணி நேரத்தில் அவரது பொற்றோரிடம் ஒப்படைத்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பாவக்கல் அருகே உள்ள எட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அன்பு. இவரது மனைவி வசந்தா. இவர்களது 3 வயது மகன் சபரி. கோவையில் கூலி வேலை செய்து வரும் தம்பதியினர் இருவரும் பொங்கல் பண்டிகைக்காக பேருந்து மூலம் அரூர் வந்துள்ளனர். பின்னர், தனியார் பேருந்து மூலம் ஆண்டியூர் கிராமத்திற்கு சென்றனர்.

harur

பேருந்தில் இருந்து இறங்கும்போது குழந்தை சபரி காணவில்லை என்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தம்பதியினர் குழந்தையை தேடி அலைந்தனர். இதனிடையே, அரூர் பேருந்து நிலையத்தில் தவறிவிடப்பட்ட குழந்தை சபரி, பெற்றோரை காணாமல் சுமார் 2 மணி நேரமாக அழுதுகொண்டிருந்தார். இதனை கண்டு பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகள், சிறுவனை மீட்டு, அதிவிரைவு படை குழுவினரிடம் ஒப்படைத்தனர்.

இதனை அடுத்து, குழந்தைக்கு பாதுகாப்பு அளித்த அதிவிரைவு படை குழுவினர், சுமார் 2 மணிநேரத்தில் அன்பு - வசந்தாவுக்கு தகவல் தெரிவித்து, அவர்களை அரூர் வரவழைத்து குழந்தையை ஒப்படைத்தனர். பெற்றோரை தவறவிட்டு தவித்த குழந்தையை மீட்டுக 2 மணிநேரத்தில் பத்திரமாக ஒப்படைத்த அதிவிரைவு படை குழுவினருக்கு பெற்றோர் மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.