கோவையில் சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரத்தை மீட்டு போலீசில் ஒப்படைத்த இளைஞர்கள்... காவல் ஆணையர் பாராட்டு!

 
cbe

கோவையில் சாலையில் கேட்பாரற்று கிடந்த ரூ.50 ஆயிரம் பணத்தை நேர்மையுடன் போலீசாரிடம் ஒப்படைத்த 3 இளைஞர்களுக்கு, காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்தார்.

கோவை வெரைட்டி ஹால் சாலையில் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு அருகே அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ரூ.50 ஆயிரம் பணத்தை தவறவிட்டு சென்றுள்ளர். அப்போது, அந்த வழியாக சென்ற ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த அன்பழகன் (42), கணுவாய் பகுதியை சேர்ந்த ஜெகன்(20) மற்றும் காளப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்த செல்லப்பாண்டி ஆகியோர் சாலையில் பணம் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர், பணத்தை எடுத்த அவர்கள், அதனை தவறவிட்டவர் தேடி வருவார் என காத்திருந்து உள்ளனர். ஆனால் யாரும் வரவில்லை.

cbe

இதனை அடுத்து, அன்பழகன், ஜெகன், செல்லப்பாண்டி ஆகிய 3 பேரும் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணனை நேரில் சந்தித்து, சாலையில் கண்டெடுத்த ரூ.50 ஆயிரம் பணத்தை ஒப்படைத்தனர். சாலையில் கிடந்த பணத்தை போலீசில் ஒப்படைத்த இளைஞர்களின் நேர்மையான செயலுக்கு மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்தார்.

தொடர்ந்து, பணத்தை தொலைத்த நபரை கண்டறிந்து, அவரிடம் ஒப்படைக்குமாறு சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளருக்கு உத்தரவிட்டார். சாலையில் கேட்பாரற்று கிடந்த ரூ.50 ஆயிரம் பணத்தை நேர்மையுடன் காவல் ஆணையரிடம் ஒப்படைத்த இளைஞர்களின் செயல் பொதுமக்களிடையே பாராட்டை பெற்று உள்ளது.