ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை... ராசிபுரம் அருகே சோகம்!

 
suicide

ராசிபுரம் அருகே ஆன்லைன் ரம்மியில் பல லட்சம் ரூபாய் பணத்தை இழந்ததால் இளைஞர் கடிதம் எழுதிவைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவர் அரசுப்பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது இளைய மகன் சுரேஷ்(26). இவர் பட்டப்படிப்பு முடித்துவிட்டு வெளிநாடு செல்வதற்காக முயற்சித்து வந்துள்ளார். இதனிடையே, செல்போனில் ஆன்லைன் ரம்மி விளையாட துவங்கிய சுரேஷ், ஆரம்பத்தில் குறைந்த அளவிலான பணத்தை கட்டி விளையாடி உள்ளார். பின்னர் அதற்கு அடிமையான இவர் ஆயிரக்கணக்கிலும், பின்னர் லட்சக்கணக்கிலும் பணம் கட்டி இழந்துள்ளார்.

rasipuram

மேலும், தனது நண்பர்களிடமும், தெரிந்தவர்களிடமும் கடன் வாங்கி ஆன்லைன் ரம்மியில் தொலைத்துள்ளார். இவ்வாறு ரூ.5 லட்சத்திற்கும் மேலாக அவர் பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பிக்கேட்டு அழுத்தம் கொடுத்து வந்துள்ளனர். இதனால் கடும் மனஉளைச்சலில் இருந்து வந்த ரமேஷ் வீட்டில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குடும்பத்தினர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்காமல், ரமேஷின் உடலை தகனம் செய்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.