விபத்தில் இரு கைகள், கால்களை இழந்த இளைஞர்... முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் செயற்கை கை, கால்கள் பொருத்தம்!

 
cbe

கோவையில் மின்விபத்தில் 2 கைகள், 2 கால்களை இழந்த இளைஞருக்கு, முதல்வரின் விரிவான மருத்துவக்காப்பீடு திட்டத்தின் கீழ் இலவசமாக செயற்கை கை, கால்கள் பொருத்தப்பட்டது.

கோவை மாவட்டம் அன்னுர் அருகே உள்ள குமரன் குன்று வேப்பம்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் சுபாஷ்(22). இவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் ஏற்பட்ட மின்சார விபத்தில் இரு கால்களும் முழங்காலுக்கு கீழும், 2 கைகளில் முழங்கைக்கு கீழும் இழந்தார். வாழ்வாதாரம் இன்றி தவித்து வந்த சுபாஷ், கடந்த சில நாட்களுக்கு முன் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் தனக்கு உதவிடும்படி கோரிக்கை மனு அளித்தார். மனுவை உடனடியாக பரிசீலனை செய்த ஆட்சியர் சமீரன், அவருக்கு தேவை மருத்துவ உதவிகளை வழங்கிடும்படி சம்பந்தபட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

cbe

இந்த நிலையில், கோவை மாவட்ட மறுவாழ்வு அலுவலர் வசந்தகுமார், கோவை அரசு மருத்துவக்கல்லுரி முதல்வர் நிர்மலா முதற்கட்டமாக அவருக்கு செயற்கை கை, கால்களை பொருத்திட முடிவெடுத்தனர். தொடர்ந்து, கோவை அரசு மருத்துவக்கல்லுரி முட நீக்கியல் மற்றும் விபத்து சிகிச்சை இயக்குநர் வெற்றிவேல் செழியன் தலைமையில் செயற்கை அங்க வடிவமைப்பாளர் பாலசந்தர், ஆனந்த் பாபு, ஜெகன் கோகுல்ராஜ் ஆகியோர் கொண்ட குழு தமிழக அரசின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் எடை குறைந்த இரு செயற்கை கைகள் மற்றும் கால்களை இலவசமாக பொருத்தினர்.

அத்துடன், சுபாஷுக்கு மனப்பயிற்சி, உடற்பயிற்சி மற்றும் நடை பயிற்சி ஆகியவை உடற்பயிற்சி நிபுணர்களால் வழங்கப்பட்டது. விபத்தில் 2 கைகள், கால்களை இழந்த நபருக்கு, முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் செயற்கை கை, கால்கள் பொறுத்தப்படுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.