கோவையில் ஆன்லைனில் வெடி பொருட்கள் வாங்கிய இளைஞர் கைது; எதிரியை கொல்ல நாட்டு வெடிகுண்டு தயாரிக்க திட்டமிட்டது அம்பலம்!

 
cbe

கோவை சரவணம்பட்டியில் ஆன்லைன் மூலம் வெடிபொருட்களை வாங்கி நாட்டு வெடிகுண்டு தயாரிக்க திட்டமிட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

கோவையில் நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து, இணையதளங்கள் மூலம் வெடி பொருட்கள் வாங்கும் நபர்களை, கோவை மாநகர போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.  இந்த நிலையில், கோவை சரவணம்பட்டியை சேர்ந்த ஒருவர் இணையதளத்தில் பொட்டாசியம் நைட்ரேட், சல்பர் போன்ற வெடிபொருட்கள் ஆர்டர் செய்ததை கண்டுபிடித்த போலீசார், அவர் ஆர்டரை வாங்கும்போது மடக்கிப்பிடித்து, காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

saravampatti

அதில் அவர் கோவில்பட்டியை சேர்ந்த மாரியப்பன் என்பதும், கோவை சரவணம்பட்டியில் தங்கி பழ வியாபாரம் செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும், ரவுடியான இவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. இதனிடையே போலீசாரின் விசாரணையில், மாரியப்பன் தனது எதிரியான மகாராஜன் என்பவரை கொலை செய்ய திட்டமிட்டு, நாட்டு வெடிகுண்டு தயாரிக்க ஆன்லைனில் வெடி பொருட்களை வாங்கியது தெரிய வந்தது.

இதனிடையே, சரவணம்பட்டி காவல் நிலையத்தில் இருந்த மாரியப்பனிடம் என்ஐஏ அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து மாரியப்பனை வெடி பொருட்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், அவரிடம் இருந்து பொட்டாசியம் நைட்ரேட், சல்பர் ஆகிய வெடி பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.