அலங்காநல்லூர் அருகே மின்வேலியில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு!

 
mdu

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே மின்வேலியில் சிக்கி இளைஞர் மற்றும் அவரது 5 வளர்ப்பு நாய்கள் பரிதாபமாக உயிரிழந்தன.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம். தொழிலாளி. நாய்கள் மீது அதிக பிரியம் கொண்ட இவர், தனது வீட்டில் 5 நாய்களை வளர்த்து வருகிறார். இரவு நேரங்களில் காட்டுப்பன்றி வேட்டைக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்த மாணிக்கம், அப்போது தனது வளர்ப்பு நாய்களையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார். இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று இரவு புதுப்பட்டி அருகே உள்ள கொண்டையம்பட்டி கிராமத்தில் உள்ள காட்டுபகுதியில் காட்டு பன்றி வேட்டைக்காக மாணிக்கம் சென்றுள்ளார். 

dead body

இதனிடையே அந்த பகுதியில் அசோக்குமார் என்பவர், தன்னுடைய பூந்தோட்டத்தில், வன விலங்குகள் புகாமல் தடுக்க சட்ட விரோதமாக மின்வேலி அமைத்துள்ளார். இதனை அறியாமல் மாணிக்கம் வேட்டைக்கு சென்றுள்ளார். மின் வேலியை கண்டு கொண்ட மாணிக்கத்தின் 5 வளர்ப்பு நாய்களும், அவரை காப்பாற்ற எண்ணி, மின்வேலியை மிதித்து அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த மாணிக்கம், அவற்றை காப்பாற்ற முயன்றபோது அவரும் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். 

தகவல் அறிந்த அலங்காநல்லூர் போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, பூந்தோட்ட உரிமையாளர் அசோக்குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர். எஜமானரை காப்பாற்ற எண்ணி வளர்ப்பு நாய்களும், வளர்ப்பு நாய்களை காப்பாற்ற முயன்று மாணிக்கமும் மின்வேலியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.