பெரம்பலூரில் இளைஞர் கத்தியால் குத்திக் கொலை... 6 பேர் கும்பலுக்கு போலீசார் வலை!

 
murder

பெரம்பலூரில் முன்விரோதம் காரணமாக இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெரம்பலூர் துறைமங்கலம் இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருவர், தனியார் கல்லூரி மாணவர் வின்சன். இவருக்கும், பெரம்பலுர் வெங்கடேசபுரம் பகுதியை சேர்ந்த பிரித்திகை வாசன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக நேற்று காலை பிரித்திகை வாசன், தனது நண்பர்களுடன் சென்று, வின்சனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததுடன், அவரை தாக்க முயன்றுள்ளனர்.

dead body

அவர்களிடம் தப்பியோடிய வின்சன், தனது நண்பர்களான திருவள்ளுவர் நகரை சேர்ந்த வினோத், கார்த்தி உள்ளிட்டோருடன் சென்று, பிரித்திகை வாசனின் நண்பரான பாரதிதாசன் நகரை சேர்ந்த பிரத்திஷ் என்பரை காட்டுப்பகுதிக்கு துக்கிச் சென்று தாக்கியுள்ளனர். பின்னர், அவர்களிடம் இருந்து பிரத்தீஷ் தப்பியோடி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரித்திகை வாசன் தரப்பினர், நேற்று மாலை பெரம்பலூர் டோம்னிக் பள்ளியின் அருகே நின்றிருந்த தினேஷ், கார்த்தி ஆகியோரை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு, அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதில் பலத்த காயமடைந்த வினோத், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கார்த்தி பலத்த காயமடைந்தார்.

தகவல் அறிந்து வந்த பெரம்பலூர் போலீசார், கார்த்தியை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தொடர்ந்து, தினேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார் இந்த சம்பவம் குறித்து  கொலை வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.