துறையூர் அருகே மரத்தின் மீது பைக் மோதிய விபத்தில் இளைஞர் பலி!

 
accident

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே சாலையோர மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள காளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். விவசாயி. இவரது மகன்கள் சக்திவேல்(23), சதிஷ்(20). இருவரும் மணச்சநல்லுரில் உள்ள தனியார் அரிசி ஆலையில் வேலை செய்து வந்தனர். இந்த நிலையில், நேற்று இரவுநேர பணிக்காக சக்திவேல், சதிஷ் மற்றும் உறவினரான சந்துரு (23) ஆகியோர், ஒரே இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றனர்.

thuraiyur

காளிப்பட்டி அடுத்த ஜீவாநகர் பகுதியில் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரம் இருந்த புளிய மரத்தின் மீது அதிவேகமாக மோதியது. இதில் வாகனத்தில் சென்ற முவரும் பலத்த காயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சக்திவேல் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர், சதிஷ், சந்துரு ஆகியோர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்து குறித்து துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.