நாகர்கோவில் அருகே ஆற்றில் மூழ்கி இளைஞர் பலி... மனைவியை காப்பாற்ற முயன்றபோது சோகம்!

 
ngl

குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மனைவியை காப்பாற்ற முயன்ற கணவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

நெல்லையை சேர்ந்தவர் ஷியாம் (28). இவர் சென்னையில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் மென்பொறியாளராக பணிபுரிந்து வந்தார். இருவருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன் நாகர்கோவிலை சேர்ந்த சுஷ்மா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. தலை தீபாவளி கொண்டாடுவதற்காக தம்பதியினர் இருவரும் கன்னியாகுமரிக்கு வந்திருந்தனர். இந்த நிலையில், நேற்று காலை காளிகேசம் மலைப்பகுதியை சுற்றி பார்ப்பதற்காக சென்றனர். பின்னர் அந்த பகுதியில் உள்ள ஆற்றில் குளித்தபோது, எதிர்பாராத விதமாக சுஷ்மா தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த ஷியாம், மனைவியை காப்பாற்ற ஆற்றில் இறங்கினார்.

அப்போது, எதிர்பாராத விதமாக ஆழமான பகுதியில் சிக்கி அவர் நீரில் மூழ்கினார். இதனிடையே, ஆற்றில் இருந்த செடிகளை பிடித்துக்கொண்டு கரையேறிய சுஷ்மா, அருகில் இருந்தவர்களிடம் கூறி ஷியாமை மீட்க கூறினார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த நாகர்கோவில் தீயணைப்பு நிலைய வீரர்கள், ஆற்றில் இறங்கி தேடினர். அப்போது, ஷியாம் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தொடர்ந்து, கீரிப்பாறை போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக  குமரி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.