கடனை திருப்பி செலுத்த முடியாததால் இளைஞர் தற்கொலை... ஈரோடு அருகே சோகம்!

 
poison

ஈரோடு அருகே கடனை திருப்பி செலுத்த முடியாததால் இளைஞர் விஷ மாத்திரையை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அடுத்த அனுமன்பள்ளி சங்கரன்காடு பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி சிவாத்தாள். தம்பதியினர் இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு சுப்பிரமணி (33) என்ற மகனும், ராணி(27) என்ற மகளும் உள்ளனர். சமீபத்தில் ராணிக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமண செலவிற்காக சுப்பிரமணி தெரிந்தவர்களிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் கடனை அவரால் கடனை சரிவர செலுத்த முடியவில்லை என கூறப்படுகிறது. இதனால் சுப்பிரமணி மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

erode gh

சம்பத்தன்று மதுபோதையில் வீட்டிற்கு வந்த சுப்பிரமணி, தனது தாயிடம் தங்கை திருமணத்திற்கு வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாததால், தான் இனி உயிரோடு இருக்க மாட்டேன் என்றும் கூறிவிட்டு வெளியே புறப்பட்டு சென்றுள்ளார். பின்னர் தற்கொலை சல்பாஸ் எனப்படும் விஷ மாத்திரையை சாப்பிட்ட சுப்பிரமணி, இது குறித்து தனது தாய்க்கு செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த சிவாத்தாள், உறவினர்களுடன் சென்று சுப்பிரமணியை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அரச்சலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.