பங்குச்சந்தையில் ரூ.15 லட்சத்தை இழந்ததால் இளைஞர் விஷம் குடித்து தற்கொலை... கோவையில் சோகம்!

 
poison

கோவையில் பங்குச்சந்தையில் முதலீடு செய்த ரூ.15 லட்சம் பணத்தை இழந்ததால் விரக்தியில் இளைஞர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கோவை சிங்காநல்லூர் கண்ணன் நகர் பகுதியில் வசித்து வருபவர் சம்பத்குமார். இவர் எலெக்ட்ரானிக் கடையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு கைக்குழந்தை உள்ளனர். இந்த நிலையில், சம்பத்குமார், குடும்பத்தினருக்கு தெரியாமல் தனது சேமிப்பு நிதி ரூ.15 லட்சத்தை ஆன்லைன் மூலம் பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ளார். ஆனால் முதலீடு செய்த பணத்தில் இருந்து சம்பத்குமாருக்கு லாபம் கிடைக்கிவில்லை. மேலும், அவர் ரூ.15 லட்சம் பணத்தையும் பங்குச்சந்தையில் இழந்துள்ளர். இது குறித்து குடும்பத்தினரிடம் தெரிவிக்காமல் அவர் மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். 

coimbatore
இந்த நிலையில், வாழ்க்கையில் விரக்தியடைந்த சம்பத்குமார் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, அவர் விஷம் குடித்ததை மனைவியிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சம்பத்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சம்பத்குமாரின் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். பங்குச்சந்தையில் ரூ.15 லட்சத்தை இழந்ததால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.