வந்தவாசி அருகே முன்விரோதத்தில் இளைஞர் அடித்துக்கொலை!

 
murder

வந்தவாசி அருகே முன்விரோதம் காரணமாக 19 வயது இளைஞரை அடித்துக்கொன்ற சிறுவனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள விழுதுபட்டு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். கட்டிட தொழிலாளி. இவரது மகன் சக்திவேல்(19). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், சம்பவத்தன்று சக்திவேல் கிராமத்தில் உள்ள ஏரிக்கு மீன்பிடிக்க சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு அந்த சிறுவனும் வந்த நிலையில், இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த சிறுவன், அருகில் கிடந்த விறகு கட்டையை எடுத்து சக்திவேலை சரமாரியாக தாக்கியுள்ளார். 

vandavasi
இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து, சிறுவன் அங்கிருந்து தப்பியோடினான். இது குறித்து தகவல் அறிந்த கீழ்கொடுக்கானூர் காவல் நிலைய போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கொலையான சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து கொலை வழக்குப்பதிவு செய்து, 17 வயது சிறுவனை பிடித்து விசாரித்து வருகின்றனர். முன்விரோதம் காரணமான இளைஞர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.