கலசப்பாக்கம் அருகே சொத்து தகராறில் இளைஞர் அடித்துக்கொலை - உறவினர்கள் வெறிச்செயல்!

 
murder

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே சொத்து தகராறில் இளைஞரை இரும்பு கம்பியால் அடித்துக்கொன்ற உறவினர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே உள்ள தேவனாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் காந்தி. விவசாயி. இவருக்கும், இவரது சகோதரரான அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இருவருக்கும் பொதுவான வயலின் வரப்பில் உள்ள தேக்கு, தென்னை மரங்கள் தனக்கு சொந்தம் என கூறி காந்தி, தம்பி சுப்பிரமணி வீட்டாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை தொடர்ந்து, நேற்று காந்தியின் மகனான தங்கதுரைக்கும், சுப்பிரமணியின் மகன்கள் வினோத், விஜி ஆகியோருக்கும் இடையே மரங்கள் தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. 

kalasapakkam
வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த வினோத், விஜி ஆகியோர், தங்கதுரையை இரும்பு கமபியால் சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தங்கதுரை பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின் பேரில், கலசப்பாக்கம் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய வினோத், விஜி ஆகியோரை தேடி வருகின்றனர்.