கோவையில் பல்வேறு இடங்களில் ஒலிபெருக்கிகளை திருடிய இளைஞர் கைது; 15 ஆம்ப்ளிபையர்கள் பறிமுதல்!

 
mettupalayam

தமிழகம், கேரளா மாநிலங்களில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கிகளை திருடிய ஆந்திர இளைஞரை போலீசார் கைது செய்தனர்.  

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காட்டூர் பகுதியில் உள்ள பள்ளி வாசலில் வழிபாட்டிற்காக பயன்படுத்தப்பட்ட ஆம்ப்ளிபையர் உள்ளிட்ட ஒலிப்பெருக்கி கருவிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயமாகியது. இது குறித்து பள்ளிவாசல் நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இந்த கொள்ளை சம்பவம் போலவே கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் கேரள மாநிலத்தில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் பள்ளிவாசல்களில் இருந்த ஒலி பெருக்கி கருவிகள் திருடப்பட்டது தெரியவந்தது.

arrest

இதனை அடுத்து, மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணன் குற்றவாளிகளை பிடிக்க, மேட்டுப்பாளையம் டிஎஸ்பி பாலாஜி தலைமையில், காவல் ஆய்வாளர் நவநீத கிருஷ்ணன், உதவி ஆய்வாளர்கள் செல்வ நாயகம், முருகநாதன் ஆகியோர் அடங்கிய தனிப்படையை அமைத்து உத்தரவிட்டார். தனிப்படை போலீசாரின் விசாரணையில், ஒலிபெருக்கி கருவிகளை திருடிய நபர் ஆந்திர மாநிலம்  சித்தூர் டி.கே. பள்ளி பகுதியை சேர்ந்த அசேன் (32) என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, சேலத்தில் பதுங்கியிருந்த அசேனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து, அவரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அசேனின் மகனுக்கு இதய பிரச்சினை உள்ளதால், அவருக்கு சிகிச்சை அளிக்கும் செலவிற்காக திருட்டு தொழிலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, அவரிடமிருந்து 15 ஆம்ப்ளிபயர்களை பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, கைதான அசேன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.