ஈரோட்டில் இருசக்கர வாகனத்தில் ரேஷன்அரிசி கடத்திய இளைஞர் கைது; 1,250 கிலோ ரேஷன்அரிசி பறிமுதல்!

 
ration rice

ஈரோடு அருகே இருசக்கர வாகனத்தில் ரேஷன்அரிசி கடத்திய நபரை கைதுசெய்த குடிமைப்பொருள் வழங்கல் பிரிவு போலீசார், அவரிடம் இருந்து 1,250 கிலோ ரேஷன் அரிசி மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

ஈரோடு மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு எஸ்பி பாலாஜி உத்தரவின் பேரில், ஆய்வாளர் பன்னீர்செல்வம் மேற்பார்வையில் போலீசார் கஸ்பா பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, இருசக்கர வானத்தில் இருந்த மூட்டைகளை பிரித்து பார்த்தபோது, அதில் ரேஷன் அரிசியை கடத்திச்சென்றது தெரிய வந்தது. தொடர்ந்து, ரேஷன் அரிசியை கடத்தி வந்த இளைஞரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

arrest

அதில் அவர் மொடக்குறிச்சி அடுத்த பி.மேட்டுப்பாளையம் பூந்துறை பகுதியை சேர்ந்த மணிகண்டன் (33) என்பதும், அவர் வடமாநிலத்தவர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக ரேஷன் அரிசியை கடத்திச் சென்றதையும் ஒப்புக் கொண்டார். தொடர்ந்து, அவர் அளித்த தகவலின் பேரில், அதே பகுதியில் பதுக்கிவைத்திருந்த 1,250 கிலோ ரேஷன் அரிசியையும், கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், ரேஷன்அரிசி கடத்தல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்