கோவையில் கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது!

 
arrest

கோவை துடியலூர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

கோவை துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக  போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், துடியலூர் உதவி ஆய்வாளர் குருசந்திர வடிவேல் தலைமையில் போலீசார், நல்லாம்பாளையம் கருவாடுபேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்கு சந்தேகத்திற்கு உரிய விதமாக இளைஞர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனை கண்ட போலீசார், அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

police

அப்போது, அந்த நபர் மணியக்காரம்பாளையம் பகுதியை சேர்ந்த நந்தகுமார் என்பதும், அவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.  இதனை தொடர்ந்து, போலீசார் நந்தகுமாரை துடியலூர் காவல் நிலையம் அழைத்துச்சென்று, அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து  விற்பனைக்காக வைத்திருந்த 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.