சிறு வயதில் காதல் திருமணம்... எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர் - விரக்தியில் உயிரை மாய்த்த இளம்ஜோடி!

 
tuti

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே காதல் திருமணம் செய்த இளம்ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள சின்னமாடன் குடியிருப்பை சேர்ந்தவர் தாசன். இவரது மகன் விஜய்(16). இவரும், அதே பகுதியை சேர்ந்த மூக்காண்டி மகள் மேகலாவும் (15) காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர்.  இதுகுறித்து மேகலாவின் தந்தை அளித்த புகாரின் பேரில் நாசரேத் போலீசார், விஜயை குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு  செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், மேகலாவை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். சமீபத்தில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த விஜய், மேகலாவை அழைத்துச் சென்று குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில், பெற்றோர் திருமண வயது வந்ததும் இருவரும் சேர்ந்து வாழும்படி அறிவுறுத்தி உள்ளனர். இந்த நிலையில், கடந்த புதன்கிழமை இரவு இருவரும் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளனர். இதனால் பெற்றோர் அவர்களை தேடி வந்துள்ளனர்.

poison 

இந்த நிலையில், நேற்று காலை வாலசுப்பிரமணியபுரத்தில் இருந்து சின்னமாடன் குடியிருப்பு செல்லும் வழியில் உள்ள குளக்கரையில் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்த நிலையில் சடலமாக கிடந்தனர். தகவல் அறிந்த நாசரேத் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று இருவரது உடல்களையும் கைப்பற்றி  பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து விஜய் தந்தை தாசன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இளம்ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.