மதுரை அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை... திருமணமான 2 வாரங்களில் சோகம்!

 
dead

மதுரை அருகே திருமணமான 2 வாரங்களில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை அருகே உள்ள கோவில் பாப்பாக்குடி பகுதியை சேர்ந்தவர் அங்காள ஈஸ்வரி (19). 12ஆம் வகுப்பு படித்துள்ள இவர், திருமங்கலம் அடுத்த ஆலம்பட்டியில் உள்ள உறவினர் நாகலட்சுமி வீட்டில் தங்கியிருந்து, அவரது செருப்பு கடையில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில், கடந்த மாதம் 26ஆம் தேதி அங்காள ஈஸ்வரி வீட்டிலிருந்து திடீரென மாயமாகினார். இது தொடர்பாக நாகலட்சுமி அளித்த புகாரின் பேரில், நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் அங்காள ஈஸ்வரி, திண்டுக்கல்லை சேர்ந்த நாகபாண்டி என்ற இளைஞரை திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது.

madurai gh

இதனை தொடர்ந்து, அங்காள ஈஸ்வரி, அவரது கணவர் நாகபாண்டி ஆகியோர், கடந்த 8ஆம் தேதி ஆலம்பட்டிக்கு வந்த நிலையில், நாகபாண்டி அவரை உறவினர் நாகலட்சுமியிடம் ஒப்படைத்து விட்டு சென்றுள்ளார். கணவர் விட்டுச்சென்றால் மனவேதனையில் இருந்த அங்காள ஈஸ்வரி, நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலின் பேரில் நாகமலை புதுக்கோட்டை போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து  வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.