திருமணமான 4 ஆண்டுகளில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை... காட்பாடி அருகே சோகம்!

 
suicide

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே திருமணமான 4 ஆண்டுகளில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள வெள்ளைக்கல்மேடு பகுதியை சேர்ந்தவர் ஆதர்ஷ்(31). இவர் பெங்களுருவில் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சுகன்யா(29). இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். ஆதர்ஷ் பெங்களுரில் தங்கி பணிபுரிந்து வரும் நிலையில், சுகன்யா குழந்தையுடன் வெள்ளைக்கல்மேட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில், ஆதர்ஷ் குடும்பத்தினர் சுகன்யாவிடம் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

katpadi

இதனால் அவர் மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் துக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த சுகன்யாவின் தந்தை சந்தான கிருஷ்ணன், கணவர் வீட்டினர் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறி காட்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுகன்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும், திருமணமான 4 ஆண்டுகளில் சுகன்யா இறந்ததால் இந்த சம்பவம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரித்து வருகிறார்.