வாழப்பாடி அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை... வருவாய் கோட்டாட்சியர் விசாரணை!

 
dead

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே  திருமணமான ஓராண்டில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம் திம்மநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் - மலர்விழி தம்பதியினர். இவர்களது மகள் சுகுணா(19). இவருக்கு கடந்த ஆண்டு சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள புங்க மடுவு மலைக்கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன்(28) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. கடந்த சில மாதங்களுக்கு முன் கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் சுகுணா பலத்த காயமடைந்துள்ளார். இதற்காக, அவர் பேளுர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

vazhapadi

கடந்த 3 மாதமாக சிகிச்சை பெற்றும் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லாததால் சுகுணா மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் கடந்த 25ஆம் தேதி பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை உறவினர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுகுணா பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து சுகுணாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வாழப்பாடி போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், திருமணமான ஓராண்டில் சுகுணா தற்கொலை செய்து கொண்டதால் இந்த சம்பவம் குறித்து சேலம் ஆர்.டி.ஓ விசாரித்து வருகிறார்.