திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை... உளுந்தூர்பேட்டை அருகே சோகம்!

 
fire accident

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்துள்ள பின்னலவாடி பகுதியை சேர்ந்தவர் ரகோத்தம்மன். தொழிலாளி. இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன் காயத்ரி (22) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் காயத்ரிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு உள்ளது. இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அவர், உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓட்டிச் சென்று காயத்ரி மீது பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

dead body

இதில் பலத்த தீக்காயமடைந்த காயத்ரி சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு காயத்ரி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து காயத்ரியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், திருமணமான 6 மாதத்தில் காயத்ரி தற்கொலை செய்து கொண்டதால் இந்த சம்பவம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.