ஈரோட்டில் கட்டுமான பணியின்போது சுவர் சரிந்து விழுந்து தொழிலாளி பலி
ஈரோடு வெண்டிப்பாளையம் பகுதியில் கட்டுமான பணியின் போது சுவர் சரிந்து விழுந்து கட்டிட தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், பெண் உட்பட 2 பேர் படுகாயமடைந்தனர்.
ஈரோடு வெண்டிபாளையம் குப்பைக்காடு பகுதியில் 60-வது வார்டு சுயேச்சை கவுன்சிலர் தண்டபாணிக்கு சொந்தமான வீடு கட்டுமான பணி நடந்து வருகிறது. கட்டுமான பணியில் வெண்டிபாளையம் பாலதண்டாயுதபாணி வீதியை சேர்ந்த ராஜேந்திரன் (50), மாதேஸ்வரி(50), ராஜு (42), சாந்தி (44) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை 6 அடி உயரத்திற்கு ஹாலோ பிளாக் கற்களை கொண்டு சுவர் வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து, சனிக்கிழமை கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தபோது, சுவர் காயாமல் ஈரபதத்துடன் இருந்துள்ளது. இதுகுறித்து, ராஜேந்திரன், கட்டிட மேஸ்திரியான பொன்னுசாமியிடம் கூறியுள்ளார். அப்போது, இதுகுறித்து கட்டிட உரிமையாளரிடம் பேசி விட்டதாகவும, இன்றைக்கே முழு சுவரையும் வைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் ராஜேந்திரன் மற்றும் ராஜு ஆகியோர் சாரத்தின் மீது மீதமுள்ள சுவர் வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக சுவர் சரிந்து சாரத்தின் மீது விழுந்தது. இதில், கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த ராஜேந்திரன், ராஜு, மாதேஸ்வரி ஆகியோர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த சக தொழிலாளர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்டனர்.
இதில், ராஜேந்திரனுக்கு தலை, கால் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. மாதேஸ்வரி மற்றும் ராஜுவுக்கு லேசான காயமும் ஏற்பட்டது. இதையடுத்து, மூவரையும் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ராஜேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். மாதேஸ்வரி ,ராஜு ஆகியோருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து மொடக்குறிச்சி போலீசார், சுயேச்சை கவுன்சிலர் தண்டபாணி, கட்டிட மேஸ்திரி பொன்னுசாமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

