பல்லடம் அருகே கார் மோதி தொழிலாளி பலி... விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

 
palladam

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சாலையில் நடந்து சென்ற ஓட்டல் ஊழியர் மீது கார் மோதிய விபத்தில், அவர் பரிதாபமாக உயிரழந்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள வெட்டுபட்டான் குட்டை பகுதியில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வந்தார். இதற்காக அருகிலேயே அறை எடுத்து தங்கி, பணிக்கு சென்று வந்தார். இந்த நிலையில், நேற்று மதியம் அண்ணாதுரை தனது அறையில் இருந்து ஓட்டலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக அதிவேகமாக வந்த சொகுசு கார் ஒன்று அண்ணாதுரை மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் அண்ணாதுரை பலத்த காயமடைந்தார். அவரை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

palladam

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அண்ணாதுரை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த பல்லடம் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே, அந்த பகுதியில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகிய விபத்து காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.