கோவையில் மின்னல் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு!

கோவை தடாகம் சோமையனுரில் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளி மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை தடாகம் சாலை சோமையனுர் பகுதியை சேர்ந்தவர் ரெங்கராஜ்(56). இவர் பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், நேற்று மதியம் ரெங்கராஜ் வழக்கம்போல் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, அந்த பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து கொண்டிருந்தது. இதனால், ரெங்கராஜ் மற்றும் அவருடன் வேலை செய்த வீரன் ஆகியோர் மரத்தின் அடியில் நின்றுள்ளனர்.
அப்போது எதிர்பாராத விதமாக அவர்கள் மின்னல் தாக்கியது. இதில் ரெங்கராஜ் பலத்த காயமடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ரெங்கராஜை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் அதிர்ஷடவசமாக வீரன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த சம்பவம் குறித்து தடாகம் போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.