கும்பகோணத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி... திருவிழாவிற்கு அலங்கார வளைவு அமைத்தபோது சோகம்!

 
Death

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் கோவில் திருவிழாவிற்கு அலங்கார வளைவு அமைத்தபோது மின்சாரம் தாக்கியதில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பெருமாண்டி தெற்கு தெருவில் வசித்து வருபவர் ரமேஷ். இவர் திருவிழாக்களுக்கு பந்தல் அமைக்கும் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 12ஆம் தேதி கும்பகோணத்தில் உள்ள பெரிய நாயகி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி, காமராஜர் நகர் சாலையில் அலங்கார வளைவு அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அந்த வழியாக சென்ற உயர் அழுத்த மின்கம்பி ரமேஷ் மீது உரசியுள்ளது. இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் பலத்த காயமடைந்தார்.

thanjavur gh

அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ரமேஷின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் கும்பகோணம் தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.