திருப்புவனம் அருகே விஷ வண்டுகள் கடித்து தொழிலாளி பலி!

 
dead body

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே விஷ வண்டுகள் கடித்ததில் படுகாயமடைந்த ஆடு மேய்க்கும் தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள வடுகன் குளம் கிராமத்தை சேர்ந்தவர் மகாலிங்கம். இவர் ஆடு மேய்க்கும் தொழிலாளியாக உள்ளார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் மகாலிங்கம் வடுகன்குளத்தில் உள்ள கண்மாய்க்கு ஆடுகளை மேய்க்க சென்றுள்ளார். அங்கு ஆடு மேய்த்து கொண்டிருந்தபோது, கண்மாய் கரையில் உள்ள மரத்தில் இருந்த விஷத்தன்மை கொண்ட கதம்ப வண்டுகள் திடீரென மகாலிங்கத்தை சூழ்ந்து கொண்டு கடித்தன.

sivagangai

இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று மகாலிங்கம் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து திருப்புவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.