குலசேகரம் அருகே தொழிலாளி அடித்துக் கொலை - போலீசார் விசாரணை!

 
dead body

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே தொழிலாளி அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள மணியங்குழியை சேர்ந்தவர் தேவதாஸ் (65). இவர் கேரளாவில் தொழிலாளி ஆக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி சுசிலா. கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி, கடந்த சில நாட்களுக்கு முன் தேவதாஸ் மணியங்குழிக்கு வந்திருந்தார். இந்த நிலையில், கடந்த 24ஆம் தேதி நண்பர்களை பார்க்க செல்வதாக கூறி தேவதாஸ் புறப்பட்டு சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் குடும்பத்தினர் அவரை தேடி வந்தனர்.

police

இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை மாலை சுசிலா வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தபோது, அங்கு தேவதாஸ் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சுசிலா, தேவதாஸை மீட்டு குலசேகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த சம்பவம் குறித்து குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தேவதாசை சிலர் தாக்கியது தெரிய வந்தது.

இதனை அடுத்து, போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த செவ்வாய்கிழமை இரவு தேவதாஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை அடுத்து, போலீசார் கொலை வழக்காக மாற்றம் செய்து, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தேவதாஸை தாக்கிய நபர்களை தேடி வருகின்றனர்.