கூடலூர் அருகே மின்சாரம் தாக்கி பெண் தொழிலாளி பலி

 
dead body

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தனியார் தேயிலை தோட்டத்தில் மின்சாரம் தாக்கி பெண் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த தேவர்சோலை சர்க்கார் மூளை பகுதியை சேர்ந்தவர் சந்திரம்மாள்(45). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்து வந்தார். இன்று காலை  வழக்கம்போல் சந்திரம்மாள் தேயிலை தோட்டத்திற்கு சென்று பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, தோட்டத்திற்கு மேலே சென்ற மின்சார கம்பி அறுந்து தோட்டத்தில் கிடந்துள்ளது. இதனை கவனிக்காத சந்திரம்மாள் எதிர்பாராத விதமாக மின்கம்பியை மிதித்துள்ளார்.  இதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சக தோட்ட தொழிலாளர்கள் சந்திரம்மாவின் உடலை எடுக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

nilgiris

அப்போது, மின்கம்பியை முறையாக பராமரிக்காத மின்வாரிய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், சந்திரம்மாள் குடும்பத்திற்கு எஸ்டேட் நிர்வாகம் உரிய இழப்பீடு வழங்கவும் கோரி   கூடலூர் - கேரளா நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.