குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை... நம்பியூர் அருகே சோகம்!

 
suicide

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள பறைக்காட்டுத் தோட்டம் கிராமத்தில் வசித்து வருபவர் நாச்சிமுத்து. விவசாயி. இவருக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் உமா மகேஸ்வரி (36) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு குழந்தை இல்லை. இதனால் உமா மகேஸ்வரி குழந்தை பேருக்காக மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.  இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு உமா மகேஸ்வரி, மலையம்பாளையம் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தபோது அவர் கர்ப்பமாக இல்லை என தெரியவந்துள்ளது. பல வருடங்களாக சிகிச்சை பெற்றும் கர்ப்பம் தரிக்காததால் அவர் விரக்தியுடன் காணப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உமா மகேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

nambiyur

குடும்பத்தினர் அளித்த தகவலின் பேரில் வரப்பாளையம் போலீசார், உமா மகேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து உமா மகேஸ்வரியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், திருமணமான 6 ஆண்டுகளில் அவர் தற்கொலை செய்து கொண்டதால் இந்த சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ விசாரணை மேற்கொண்டு வருகிறார்.