கடன் தொல்லையால் பெண் தூக்கிட்டு தற்கொலை... திருச்செங்கோட்டில் சோகம்!

 
suicide

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் கடன் தொல்லையால்  பெண் வீடியோ பதிவு செய்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு எட்டிமடை பகுதியை சேர்ந்தவர் செல்வம் (50). கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி சிவகாமி (45). இவர்களுக்கு பிரகாஷ் என்ற மகனும், கீர்த்தனா என்ற மகளும் உள்ளனர். இதில் கீர்த்தனாவுக்கு திருமணமாகிய நிலையில், பிரகாஷ் கோவையில் பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை செல்வம் வழக்கம்போல் வேலைக்கு புறப்பட்டு சென்றுள்ளார். அப்போது, வீட்டில் தனியாக இருந்த சிவகாமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த திருச்செங்கோடு டவுன் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவரது செல்போனை கைப்பற்றி ஆய்வுசெய்தனர்.

tiruchengodu

அப்போது, சிவகாமி தற்கொலை செய்வதற்கு முன்பாக பதிவு செய்த 9 நிமிட வீடியோ ஒன்று இருந்தது. அதில் தான், திருச்செங்கோடு பச்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மாதேஸ்வரி என்பவரிடம் கடன் வாங்கி உள்ளதாகவும், பணத்தை கேட்டு அவர் தனக்கு நெருக்கடி அளிப்பதாகவும் கூறியுள்ளார். அத்துடன், பணத்தை தர தன்னை தவறான தொழிலில் ஈடுபட வலியுறுத்துவதாகவும், இல்லாவிட்டால் சிறுநீரகத்தை விற்று பணம் கொடுக்குமாறு கூறுவதாகவும் சிவகாமி தெரிவித்துள்ளார். மேலும், மணிகண்டன், பத்து தலை முனியம்மாவினாலும் தான் பாதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.

இதனை அடுத்து, திருச்செங்கோடு போலீசார், மாதேஸ்வரியை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர். மேலும், சிவகாமி வீடியோவில் கூறியுள்ள மணிகண்டன், பத்து தலை முனியம்மா குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கடன் தொல்லையால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருச்செங்கோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.