திருமணமான 2 வருடங்களில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை... வானூர் அருகே சோகம்!

 
dead

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே காதல் திருமணம் செய்த 2 வருடங்களில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் வானூரை அடுத்துள்ள பூத்துறை பகுதியை சேர்ந்தவர் ஆபிரகாம் (26). இவர் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். ஆபிரகாம், கடந்த 2 வருடங்களுக்கு முன் புதுச்சேரியை சேர்ந்த சிவஜோதி (21) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் சிவஜோதி மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் ஆபிரகாமுக்கும், சிவஜோதிக்கும் இடையே மீண்டும் குடும்ப தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த சிவஜோதி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

vilupuram

தகவல் அறிந்து வந்த ஆரோவில் போலீசார், சிவஜோதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து சிவஜோதியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் ஆரோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். காதல் திருமணம் செய்த 2 வருடங்களில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.