பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை... குளித்தலை அருகே சோகம்!

 
poison

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பெற்றோர் கண்டித்ததால் பட்டதாரி பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள நெய்தலூர் காலனி கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர் (47). விவசாயி. இவரது மகள் ஜெயஸ்ரீ (23). பி.எஸ்சி கணிதம் படித்துள்ள இவர், வீட்டில் இருந்து அரசு வேலைக்கு தயாராகி வந்தார். மேலும், அவ்வப்போது விவசாய வேலைக்கும் சென்று வந்தார். இதனால் பெற்றோர் அவரை வேலைக்கு செல்ல வேண்டாம் எனவும், வீட்டில் இருந்து படிப்பில் கவனம் செலுத்தும்படி அறிவுறுத்தி உள்ளனர். இதனால் ஜெயஸ்ரீ மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

kulithalai

அவரை உறவினர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், நேற்று இரவு ஜெயஸ்ரீ சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தந்தை பன்னீர் அளித்த புகாரின் அடிப்படையில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.