கிருஷ்ணகிரி அருகே நிலத் தகராறில் பெண் அடித்துக்கொலை!

 
murder

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே நிலத் தகராறில் பெண்ணை உருட்டுக்கட்டையால் அடித்துக்கொன்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்த சந்தம்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி மாதம்மாள். கணவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்த நிலையில், மாதம்மாள் தனியே வசித்து வந்தார். இந்த நிலையில், மாதம்மாளுக்கும், அவரது கணவரின் தம்பியான சரவணனுக்கும் இடையே நிலத் தகராறு இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், இருவருக்கும் பொதுவான சுவற்றில், சரவணன் மின் மோட்டார் இணைப்பு வைத்திருந்தார். இதனை நேற்று மாதம்மாள் அகற்றியுள்ளார். இதற்கு சரவணன் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

krishnagiri

அப்போது, சரவணனின் உறவினரான ரமேஷ் என்பவர், மாதம்மாளை உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மாதம்மாளை, அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாதம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மாதம்மாளின் மகள் மஞ்சு அளித்த புகாரின் அடிப்படையில் மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடி ரமேஷை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரபப்பை ஏற்படுத்தி உள்ளது.