கோவை அருகே மாட்டு கொட்டகைக்குள் புகுந்த காட்டுயானைகளால் பரபரப்பு!

 
cbe

கோவை மாவட்டம் சின்ன தடாகம் அருகே மாட்டுகொட்டகைக்குள் புகுந்த காட்டுயானைகள் அங்கிருந்த தீவனத்தை சாப்பிட்ட சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

கோவை மாவட்டத்தில் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள தடாகம், கணுவாய் பகுதிகளில் சமீப நாட்களாக காட்டுயானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. மேலும், இரவு நேரங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் காட்டு யானைகள், விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் அந்த பகுதி விவசாயிகள் அச்சத்தில் மூழ்கி உள்ளனர். 

cbe

இந்த நிலையில், இன்று அதிகாலை சின்ன தடாகம் அடுத்த பாப்பாநயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்த விவசாயி நரசிம்மராஜ், என்பவரது தோட்டத்திற்குள் 2 காட்டுயானைகள் நுழைந்தன. அங்குமிங்கும் உலாவிய காட்டுயானைகள், தோட்டத்தில் உள்ள கொட்டகை ஒன்றில் நுழைந்து, அங்கு மாடுகளுக்காக வைக்கப்பட்டிருந்த தவிடு, புண்ணாக்கு, மக்காச்சோளம் உள்ளிட்ட தீவனங்களை சாப்பிட்டு சென்றன. மேலும், அருகில் உள்ள ரங்கசாமி, உதயகுமார் ஆகியோரது தோட்டத்திற்குள்ளேயும் புகுந்து பயிர்களை சேதப்படுத்தின.

தற்போது, இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. இதனால் சின்ன தடாகம் மற்றும் பாப்பநாய்க்கன் பாளையம் பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அச்சத்தில் உறைந்துள்ளனர். மாலை நேரங்களில் வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் காட்டு யானைகளை, வனத்துறையினர் அப்போதே விரட்டி அடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.