முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி துவக்கம்!

 
mudumalai

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் பருவமழைக்கு பிந்தைய வன விலங்குகள் கணக்கெடுக்கும் பணி நேற்று துவங்கியது. 

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பக உள்மண்டல பகுதி 321 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உடையதாகும். இங்கு ஏராளமான புலிகள், மான்கள், யானைகள், கரடிகள் உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. இக்காப்பகத்தில் ஆண்டுக்கு வனவிலங்குகளின் எண்ணிக்கை மற்றும் வாழ்வாதாரம் குறித்து பருவமழைக்கு முன்பும், பருவமழைக்கு பின்னரும் கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். 

mudumalai

அதன்படி, நடப்பு ஆண்டு பருவமழைக்கு பிந்தைய கணக்கெடுப்பு பணி நேற்று காலை தொடங்கியது. சுமார் 150 வன ஊழியர்கள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வனஊழியர்கள் 3 பேர் அடங்கிய 50 குழுக்களாக பிரிந்து வனப்பகுதியை நேர்கோட்டு பாதையாக பிரித்து கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று தொடங்கிய கணக்கெடுப்பு பணி வரும் 20 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 

இது தொடர்பாக வனத்துறை தெரிவித்துள்ளதாவது - இன்று முதல் 2 நாட்கள் வரை வனவிலங்குகளின் எச்சம், கால்தடம் போன்றவற்றை கணக்கெடுக்கும் பணி நடைபெறும். 2 நாட்களுக்கு பிறகு நீரோடை மற்றும் வனவிலங்குகள் நேரடியாக கண்டும், அதற்கான எண்ணிக்கையையும் வைத்து கணக்கெடுப்பு பணி துல்லியமாக நடைபெறும்.

mudumalai

6 நாட்கள் நடைபெறும் இந்த கணக்கெடுப்பு பணியில் இதற்காக பிரத்கேயமாக தயாரிக்கப்பட்ட செல்போன் செயலி, தெர்மா மீட்டர், ஜிபிஎஸ் கருவிகள் மூலம் துல்லியமாக இந்த கணக்கெடுக்கும் பணி நடைபெறும். 6 நாட்கள் முடிந்த பின் பருவமழைக்கு முன்பு எண்ணிக்கை மற்றும் பிந்தைய வனவிலங்குகளின் எண்ணிக்கை குறித்து துல்லியமாக கண்டறிய முடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.