களைக்கட்டிய சிராவயல் மஞ்சுவிரட்டு - காளை முட்டியதில் பார்வையாளர் பலி!

 
siravayal

சிவகங்கை மாவட்டம் சிராவயலில் நடைபெற்ற மஞ்சு விரட்டு போட்டியில் 263 காளைகள் மற்றும் 120 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். காளை முட்டியதில் பார்வையாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சிராவயல் பகுதியில் ஆண்டுதோறும் தை மாதம் 3ஆம் தேதி மஞ்சு விரட்டு போட்டி நடைபெறும். இதன்படி, இந்த ஆண்டிற்கான போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த போட்டியில் 263 காளைகளும், 120 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன்,  சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி ஆகியோர் கொடி அசைத்து மஞ்சுவிரட்டு போட்டியை தொடங்கி வைத்தனர். போட்டியின் முதல் காளையாக தொழுவத்தில் இருந்து கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது.

siravayal

தொடர்ந்து, காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதில் பெற்றிபெற்ற மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளின் உரிமையாளர்களுக்கும் ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டது. முன்னதாக சிராவயல் பொட்டல், கும்மங்குடி பொட்டல் உள்ளிட்ட பகுதிகளில் சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகள், கட்டுமாடுகளாக அவிழ்த்து விடப்பட்டன. அப்போது, போட்டியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மதுரை மாவட்டம் சுக்காம்பட்டி பகுதியை சேர்ந்த பூமிநாதன (52) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.